சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்

 


சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் வி.சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.

தன்னமலற்ற சேவைக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது என ஏராளமான விருதுகளை பெற்றவர் 
சாந்தா. தான் விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வளர்ச்சிக்கே இவர் செலவு செய்தார்.

மருத்துவர் சாந்தா தன் வாழ்நாள் முழுவதையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர்.

இந்நிலையில், இதய நோய்க்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். 
அவரது உடல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

1927ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் பிறந்தார் சாந்தா. 
விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவர் தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் இவரின் தாய்மாமா. 
பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார் சாந்தா. பின்னர், அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியைத் தொடங்கினார்.
அடையாறு மருத்துவமனையை உலகத் தரம்வாய்ந்த, புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றினார். 
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்த சாந்தா, இந்திய வேளாண் ஆய்வுக்கழக குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினாகவும், இந்திய புற்றுநோயியல் கழகத் தலைவராகவும் இருந்து சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார்.
தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் புற்றுநோய் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார் மருத்துவர் சாந்தா. 
புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் அல்லது புதிய மருத்துவ முறைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறிமுகம் செய்வதை கடமையாகக் கொண்டிருந்தவர் மருத்துவர் சாந்தா. நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றிவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.