உடல் நலம்...சில குறிப்புக்கள்
நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும், ஒரு காலாவதி நாள் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்..!!
டூத்பிரஷ்..
மூன்று மாதத்திற்கு ஒருமுறை உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும். இல்லையேல் இதனால் கூட நோய் தொற்று, உடல்நலக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.
முக்கியமாக குழந்தைகள் உபயோகப்படுத்தும் டூத் பிரஷ்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
தலையணை..
இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய தலையணை மாற்ற வேண்டும். ஒன்று, அதன் வடிவம் மாறி கழுத்து வலி உண்டாக காரணியாக இருக்கும். மற்றொன்று வீட்டில் அதிகம் தூசு சேரும் பொருள் தலையணை தான்.
அதன் மூலமாக சரும அரிப்பு அல்லது தும்மல், சளி, இருமல் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும். இந்த இரண்டு - மூன்று வருட இடைவேளையில் சீராக அவ்வப்போது தலையணையை துவைத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.
கடைசியாக உங்கள் வீட்டு தலையணையை எப்போது துவைத்தீர்கள்? மாற்றினீர்கள்?
உள்ளாடை..
வருடத்திற்கு ஒருமுறை மாற்றியே ஆகவேண்டும். இல்லையேல் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள், அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை பிறப்புறுப்புகளில் ஏற்படும்.
முக்கியமாக சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். சமீபத்திய ஆய்வில் ஐந்தில் ஒரு ஆண் தினமும் காலையில் சுத்தமாக உள்ளாடை அணிவதில்லை என்ற தகவல் வெளியாகியிள்ளது.
குளியல் டவல்..
வருடத்திற்கு ஒருமுறை குளியல் டவலை மாற்ற வேண்டும். குளியல் டவலில் சீக்கிரம் ஃபைபர் தன்மை இழப்பு நேரிடும்.
இதனால் அதில் பாக்டீரியா தொற்று அதிகரிக்க துவங்கும். நீங்கள் துவைத்தே பயன்படுத்தினாலும், அதில் பாக்டீரியா தான் அதிகரிக்குமே தவிர, உங்களுக்கு நன்மை விளைவிக்காது.
ஃபீடிங் நிப்பிள்..
குழந்தைகளுக்கு பால் தர, அழாமல் இருக்க நாம் பயன்படுத்தும் ஃபீடிங் நிப்பிளை 2 அல்லது 4 வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும்.
அதில் ஏற்படும் கிழிசல், கிராக் போன்றவை குழந்தைகளுக்கு சுகாதாரமற்றதாக மாறும். எனவே, ஓரிரு மாதத்திற்கு ஒருமுறை அதை கட்டாயம் மாற்ற வேண்டும்.
சீப்பு..
வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சீப்பை கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உங்கள் வீட்டில் கழிவறைக்கு இணையாக அழுக்கு சேரும் இன்னுமொரு பொருள் சீப்பு தான். முக்கியமாக வீட்டில் அனைவரும் தனித்தனி சீப்பு பயன்படுத்த வேண்டியது அவசியம்.
காலணிகள்..
ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் காலணிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி காலணிகளை கழுவி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிக வியர்வை தேங்கும் காரணத்தால் சரும தொற்று/பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
ஸ்பாஞ்ச்..
பாத்ரூம், கிச்சன், தரைகள் துடைக்க, சுத்தம் செய்ய பயன்படுத்தும் பஞ்சை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இல்லையேல் ஃபங்கஸ் தொற்று அதிகரிக்கும். முக்கியமாக இதன் காரணத்தால் வீட்டில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
சுத்தம் செய்யும் பொருட்கள்..
வீடு, கழிவறை, தரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ், குச்சிகள், கையுறைகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதிகமாக கெமிக்கல் ஒட்டும் காரணத்தால் இவை சுகதாரமற்ற பொருளாக வீட்டில் அண்டியிருக்கும்.
ஷூ..
ரன்னிங் ஷூக்களை வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். நீங்கள் கேசுவலாக பயன்படுத்தும் ஷூக்களை விட அதிக வியர்வை உறிஞ்சுகிறது ரன்னிங் ஷூ. எனவே, உங்களுக்கே தெரியாமல் அதில் பாக்டீரியாக்கள் அதிகமாக அண்டியிருக்கும்.
விரிப்பு..
மெத்தை விரிப்பு நம்மில் பலரும் பல வருடங்கள் மாற்றாமல் பயன்படுத்தும் பொருள். ஐந்தில் இருந்து எட்டு வருடத்திற்கு ஒருமுறை மெத்தை விரிப்பை மாற்ற வேண்டும். இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது மெத்தை விரிப்பை துவைத்து சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.
டெப்லான் பேன்.
வீட்டில் சமையல் செய்யும் உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல, சமையல் செய்ய நாம் உபோயோகப்படுத்தும் பாத்திரங்களுக்கும் கூட காலாவதி நாள் இருக்கிறது. டெப்லான் பாத்திரங்களை மூன்றில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
பிளாஸ்டிக்..
பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்களை தான் இன்று பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் வாங்கி தருகிறார்கள். பல டிசைன், வடிவங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இல்லையேல் நச்சு தன்மை அதிகமாகிவிடும்.
கம்பளம்..
கால் துடைக்க பயன்படுத்தும் கம்பளத்தை இரண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அவ்வப்போது சீரான இடைவேளையில் சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் அதிகமாக பாக்டீரியாக்கள் தாங்கும் பொருள் கம்பளம் தான்.
மோகனா செல்வராஜ்