துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் அநாகரிக பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்?
திமுக சட்டத்துறை தலைவர் சண்முகசுந்தரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சியில், ஆடிட்டர் குருமூர்த்தி, வசைமாரி பேச்சை வாரி வழங்கியிருக்கிறார்.
பட்டயக்கணக்காளரான குருமூர்த்தி, பொருளாதார அறிஞராக முன்னிறுத்தப்படுவதும், அதன் அடிப்படையில் அவர், ரிசர்வ் வங்கியின் மத்திய குழுவில் இயக்குநராக்கப்பட்டதும் அத்துறை சார்ந்த அறிஞர்களால் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இப்போது நீதித் துறை குறித்தும் கருத்து சொல்லியிருக்கிறார். சட்டத் துறையோடு எந்த தொடர்பும் இல்லாத அவர், சாஸ்த்ரா சட்ட பள்ளியின் ஆய்விருக்கை பேராசிரியராக நியமனம் பெற்றிருக்கிறார்.
2017ல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் புதிய வழக்குரைஞர்கள் உறுதியேற்பு விழாவிலும்கூட அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கௌரவ வாய்ப்புகளாலும், பார் கவுன்சில் தன்னை அங்கீகரித்ததாலும், அவர் தன்னை தற்போது சட்ட அறிஞராகவும் வெளிக்காட்டி கொள்ள ஆரம்பித்து விட்டார்.
பார் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. வழக்கறிஞர்களால் அது உரிய முறையில் கவனத்தில் எடுத்து கொள்ளப்படாமல் போய்விட்டது.
இப்போது, நீதிபதிகள் நியமனத்தையே அவர் கேலிக்குரிய ஒன்றாக சித்தரித்திருக்கிறார்.
தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களை பிடித்து அந்த வாய்ப்பை பெற்றவர்கள் என்று குருமூர்த்தி பேசியிருப்பது, இந்திய நீதித் துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு.
நீதிபதிகளின் நியமனத்தில் மத்திய - மாநில அரசுகளின் கருத்துகள் பெறப்பட்டாலும், மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பே இறுதி முடிவு எடுக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.
சட்டமியற்றும் அமைப்பு, நிர்வாக அமைப்பு, நீதி துறை என்று அரசின் ஒவ்வொரு அங்கத்துக்கும் இடையிலான அதிகார பிரிவினை கோட்பாடு இதற்கு அடிப்படையாக இருக்கிறது. சட்டம் படித்தவர்கள் என்றால் இந்த அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்கும்.
ஆடிட்டர் ஒருவருக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை. உச்சநீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் அரசமைப்பு சட்டமே தகுதியை நிர்ணயித்திருக்கிறது. அதன்படிதான், நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.