கதை திருட்டு வழக்கு... இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு

 


கதை திருட்டு வழக்கு தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி ஷங்கர் எந்திரன் திரைப்படம் எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆரூர் தமிழ்நாடான் குற்றச்சாட்டு எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ் இதழில் ஜூகிபா என்ற கதை எழுதினார். 

அதே கதையை திக் திக் தீபிகா என்ற தலைப்பில் நாவலும் எழுதி 2007ம் ஆண்டு வெளியிட்டார். 

இந்த கதையை இயக்குனர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாக கூறி, அவர் மீது ஆரூர் தமிழ்நாடான் குற்றம் சாட்டினார். 

ரத்து செய்ய மறுப்பு இதுதொடர்பாக ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை காவல்துறை ஏற்காததால், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக குற்ற வழக்கை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்தார். 

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஷங்கர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை ஷங்கருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாகக் கூறி வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. 

யாரும் ஆஜராகவில்லை ஷங்கர் சினிமா பிரபலமாக உள்ளதால் நீதிமன்றத்துக்கு வந்தால் கூட்டம் கூடி, விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால், தேவைப்படும்போது, ஆஜராகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், எழும்பூர் 2வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை முன்பு ஆரூர் தமிழ்நாடான் தொடர்ந்த வழக்கு ஜனவரி 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. 

அப்போது இயக்குனர் ஷங்கரோ அல்லது அவர் சார்பில் வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. பிடிவாரண்டு உத்தரவு இதையடுத்து, இயக்குனர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.