சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைட் டிஷ்: கொண்டைக்கடலை குருமா!
இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது.
கொண்டைக்கடலை டேஸ்ட்டோடு சேர்த்து ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது. இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. அதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவி செய்கிறது. சரி இந்த கொண்டைக்கடலையில் சப்பாத்திக்கு ஏற்ற டிஷ் எப்படி செய்வதென பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
கொண்டைக்கடலை (Black) 200 கிராம்
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/ 2 தேக்கரண்டி
சன்னா மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி – 1 தேக்கரண்டி
வெந்தய இலை – சிறிது
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 100 கிராம்
முந்திரிப்பருப்பு – 5
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 2
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
செய்முறை
(black) கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் கொண்டைக்கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாடை போனதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சன்னா மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதோடு அவித்து வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறவும்.
பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதற்கு கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீரை கூட உபயோகப்படுத்தலாம்.
கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.
குருமா கெட்டியானதும் கொத்தமல்லித்தழை, வெந்தய இலை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
சுவையான கொண்டைக்கடலை குருமா ரெடி.
இது பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா