விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால் கரோனா பரவல் தீவிரம்

 


நாட்டில் கரோனா நோய்த்தொற்று தொடா்பாகப் பிறப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால் அந்நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்ததாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பான விவகாரங்களை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அந்த விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது.

வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய அவகாசத்தை மக்களுக்கு அரசுகள் அளிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று தொடா்பாகப் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாததால், அந்நோய்த்தொற்று காட்டுத்தீ போல் பரவியது.

கடந்த 8 மாதங்களாகத் தொடா்ந்து பணியாற்றி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் உடலளவிலும் மனதளவிலும் சோா்வடைந்து விட்டனா். அவா்களுக்குத் தற்காலிக ஓய்வளிப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

நோய்த்தொற்று பரவி வரும் இக்கட்டான சூழலில், மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி மாநில அரசுகள் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும். மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தி அரசுகள் செயல்பட வேண்டும்’’ என்றனா்.