சட்டம்னா இளக்காரமா போச்சா...பீலா ராஜேசை விளாசிய நீதிபதி... அப்படி என்னதான் செய்தார்.
சென்னை: சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகளை நியமனம் செய்த பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மத்திய பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் கேகே மஞ்சுளாவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது.
இவர்கள் என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்ற உத்தரவை இவர்கள் மதிக்க மாட்டார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் நீதிபதி கூறினார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், அதிகாரிகள் நியமனம் நிறுத்து வைக்கப்படும் என கூறியதால் நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.
சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப்( கேனியன் கிளப்) நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது பத்திரப்பதிவு துறையின் கவனத்துக்கு வந்ததால்,அங்கு ஏன் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க கூடாது? என பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதை எதிர்த்து அந்த கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது.
அதிகாரிகள் நியமனம்
ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அந்த கிளப்பிற்கு 3 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்ய பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக அந்த கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மதிக்க மாட்டார்களா?
அப்போது நீதிபதி சதீஷ்குமார், பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மத்திய பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் கேகே மஞ்சுளாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த இரு அதிகாரிகளும் என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நீதிமன்ற உத்தரவை இவர்கள் மதிக்க மாட்டார்களா? அவர்கள் என்ன நினைத்து கொண்டிருக்கிறார்கள்? என்று கேள்வி நீதிபதி எழுப்பினர்.
நீதிமன்ற அவமதிப்பு
மேலும் அதிகாரிகள் இருவரும் நீதிமன்ற உத்தரவை மீற முடியும் என நினைக்கிறார்களா? இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூறுகையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்ற கூடாது என எந்த ஒரு உள்நோக்கமும் அதிகாரிக்கு கிடையாது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், அதிகாரிகள் நியமன உத்தரவு நிறுத்தி வைக்கப்படும் என உறுதி அளித்ததால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
தனியார் கிளப்பில் அதிகாரிகள் நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவு திரும்ப பெறப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் என்று அரவிந்த் பாண்டியன் உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.