கோவையில் உருவாகிறது எஸ்.பி.பி., வனம்: சிறுதுளி முயற்சியில் நாளை நடக்கிறது விழா
இசை பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவாக, 'சிறுதுளி' அமைப்பின் பெருமுயற்சியால், கோவையில் எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்படுகிறது.
இதற்கான விழா 10ம் தேதி நடக்கிறது.கோவையில், கடந்த காலங்களில் தொலைத்த, இயற்கை சூழ்ந்த காலநிலையை மீட்கவும், புதுப்பிக்கவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுள்ள நல்லுள்ளங்களால், 'சிறுதுளி' அமைப்பு உருவாக்கப்பட்டது.
நீராதாரங்களை பாதுகாப்பது; காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பது மற்றும் பயனுள்ள கழிவு மேலாண்மையை நடைமுறைபடுத்துவதை, முக்கிய குறிக்கோளாக கொண்டு, அவ்வமைப்பு செயல்படுகிறது.
மேலும், நகர்ப்புற காடுகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கோவையை சுற்றியுள்ள பகுதிகளில், ஏழு லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது.
இசைத்துறையில் அழியா இடம்பெற்ற, மறைந்த, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்ற, கடைசி காணொளி இசை நிகழ்ச்சியின்போது, 'கோவிட் என்பது அன்னை பூமியை துஷ்பிரயோகம் செய்வதற்கு நாம் செலுத்தும் விலை' என, குறிப்பிட்டிருந்தார்.
அன்னைக்கு நாம் இழைத்த பாதகத்தை மேலும் தொடராமல், இசைப்பிரியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளை செயல்படுத்தும் வகையில், 'சிறுதுளி' அமைப்பு, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியுடன் இணைந்து, நாளை காலை, 10:30 மணிக்கு, பச்சாபாளையம், ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில், எஸ்.பி.பி., வனம் அமைக்கிறது.
அவர் இவ்வுலகில் வாழ்ந்த, 74 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில், 74 மரங்களை உள்ளடக்கிய நகர்ப்புற வனம் உருவாக்குகிறது.
இதில் சிறப்பு என்னவெனில், இசைக்கருவிகள் உருவாக்க பயன்படுத்தப்படும் மரங்களின், மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
மேலும், எஸ்.பி.பி,, புகழ்ந்து பாடிய, கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தல விருட்சங்கள் மற்றும் அவரது பிறந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தின் சிறப்பு மரமும், இசைக் குறிப்பு வடிவத்தில் நடப்பட உள்ளன.
சிறந்த இசை கலைஞருக்கு செலுத்தும் அஞ்சலியாக இது அமையும்.
இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, எஸ்.பி.பி., வனத்தை திறந்து வைக்கிறார்.
சிறப்பு விருந்தினராக, 'கிரீன் கலாம்' நிறுவனரும், நடிகருமான விவேக் பங்கேற்கிறார்.'மன நிறைவான விழா'' சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், ''ஊராட்சி பகுதிகளில் இடமிருப்பதால், இன்னும் பூங்காக்கள் உருவாக்கலாம்.
பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆபீசர்ஸ் காலனி அசோசியேசன் ஆகியோர் கூட்டு முயற்சியுடன் எஸ்.பி.பி., வனம் உருவாக்கியுள்ளோம்.
மரங்கள்: ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேம்பு, சில்வர், ஓக், வேங்கை, தேக்கு, மூங்கில், பண்ருட்டி பலா,சந்தனம்மா மரம் கருங்காலி, மஹோகனி
ஸ்தல விருட்சங்கள்: கடம்பா மருதம் மகிழம் நாகலிங்கம், வன்னி, வில்வம், வாசனை மரங்கள்,பன்னீர் புஷ்பம், பவள மல்லி, மனோரஞ்சிதம், பிறந்த நட்சத்திரம்(ஆயில்யம்) மரம்:செண்பகம்புன்னை.
1.8 ஏக்கர் பரப்புள்ள இவ்விடத்தில், குழந்தைகள் பூங்கா, நுாலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
கூட்டு முயற்சியோடு நடக்கும் மன நிறைவான விழா,'' என்றார்.நடும் 74 வகையான மரங்கள் இசைக்கருவிகள் தயாரிக்க பயன் படுத்தப்படும்.