சுனாமி பேரலை - -தமிழகத்தின் கறுப்பு நாள்

 தமிழகத்தின் கறுப்பு நாள்




தமிழகத்தின் கடலோர பகுதிகளை உருத்தெரியாமல் புரட்டிப் போட்ட ஆழிப்பேரலை ஊழித்தாண்டவமாடிய 16-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆழிப்பேரலை வாரி சுருட்டிச் சென்றதில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோரின் உறவினர்கள் இன்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழகம் மிகப் பெரிய ஆழிப்பேரலை தாக்கத்தை எதிர்கொண்டது. இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகத்தால் இந்த ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி அலைகள் ஏற்பட்டன.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை அத்தனை கடலோர கிராமங்களிலும் ருத்ரதாண்டவமாடிவிட்டுப் போனது இந்த சுனாமிப் பேரலை. சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அயர்ந்து உறங்கிய மீனவர்கள், சிறுகடை வியாபாரிகள் என நூற்றுக்கணக்கானோரை ஆழிப்பேரலை அள்ளிச் சென்றது.

சென்னையைத் தொடர்ந்து மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது நாகை வேளாங்கண்ணி. கடற்கரை மணற்பரப்பு முழுவதும் கொத்து கொத்தாக ஆழிப்பேரலை விழுங்கி மீந்த சடலங்கள் சிதறிக் கிடந்தன

இதேபோல் கடலூர், புதுவை என பல கடலோர பகுதிகள் கண்ணீரில் தத்தளித்தன.

கன்னியாகுமரியின் மேலக்குடியில் ஒரே கிராமத்தில் சுனாமி பேரலை சுருட்டிக் கொண்டு போனது. தமிழகத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்துக்கும் ஆழிப்பேரலையின் வடுக்கள் இன்னமும் இருக்கின்றன.

சுனாமி நினைவு தூண் அமைக்கப்பட்ட இடங்களில் வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா?16 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நீங்க மறுக்கும் கோர தாண்டவம்

2.5 லட்சம் உயிர்களை காவு வாங்கிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவுகளையும், உடைமைகளையும் ஒருசேர பறித்துச்சென்ற அந்த கோர தாண்டவம் இன்னமும் நம் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது.

இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும் மறக்க முடியாத காயங்களை ஆழப்பதியச் செய்கின்றன. 

அந்தவகையில் டிசம்பர் 26-ந்தேதி (இன்று) எனும் இந்த நாள், தமிழகத்தின் கறுப்பு நாள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

லட்சக்கணக்கான உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி, பெரும் பணக்காரர்களையும் நடுரோட்டில் நிர்க்கதியாக நிற்கவைத்த துயரத்தை என்ன சொல்ல... உறவுகளையும், உடைமைகளையும் பறிகொடுத்து அடுத்தவேளை உணவுக்காக கண்ணீருடனும், கவலை தோய்ந்த முகங்களுடனும் வரிசையில் காத்திருந்த மக்களை நினைத்தாலே நம் கண்கள் குளமாகி விடும்.

மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரலையில் உயிழந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெற்றுள்ளது. மீன்பிடி இறங்கு தளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் மீனவர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், செருதூர் உள்ளிட்ட நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.