சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில், திங்கட்கிழமை அதிகாலை காணாமல் போன 3 மாத பெண் குழந்தை அம்பத்தூரில் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது
விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - சத்யா தம்பதி. இவர்களது இரண்டாவது குழந்தை மூன்றரை மாதமான சஞ்சனா. சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் ஒரு வாழைப்பழ மண்டியில் கூலி வேலை செய்து வருகிறார் ரமேஷ். இவர் தனது குடும்பத்தினருடன் வாழைப்பழ மண்டி அருகிலேயே வசித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் வேலை செய்த ரமேஷ், திங்கட்கிழமை அதிகாலை 4
மணியளவில் தனது வசிப்பிடத்திற்கு வந்து உறங்கியுள்ளார்.
ரமேஷ் அருகில் அவரது மனைவியும் மூன்றரை மாத குழந்தை சஞ்சனாவும் உறங்கிக்
கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணியளவில் மனைவி சத்யா எழுந்து பார்த்த போது
குழந்தையைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த தம்பதி அக்கம்பக்கத்தில் தேடிப்
பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.
அதையடுத்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகாரளித்தனர். உடனே துணை ஆணையர் ஜவஹர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
காணாமல் போன குழந்தையை 15 மணிநேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் கோயம்பேடு காவல் நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.மேலும் குழந்தையை எடுத்துச்சென்ற நபர் சம்மந்தமான காட்சியானது சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
அதை வைத்து குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காணாமல் போன குழந்தையை விரைந்து கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை அதிகாரிகளை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.
சென்னை கோயம்பேட்டில் 3 .1/2மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் குழந்தையை கடத்திய ஆறு நபர்களை கைது செய்து திறம்பட விசாரணை மேற்கொண்ட அண்ணா நகர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ஜி.ஜவகர், இ.கா.ப.,அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்,நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்