வானத்தில் அருகருகே வந்து கை குலுக்கிய வியாழன், சனி - உற்சாகமாக கண்டு ரசித்த மக்கள்

 


சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி கோள்கள் 21.12.2020  மாலை ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டன, இரண்டு கோள்களும் அருகருகே இருந்த அரிய காட்சியை தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் கண்டு ரசித்தனர். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த நிகழ்வு நடைபெற்றது. இரு கிரகங்களின் சந்திப்பு 6 நிமிடங்கள் 6 விநாடிகள் நீடித்தது.

சூரியன் மறைந்த பிறகு இரு பெரிய கோள்களும் மிகப்பெரிய நட்சத்திரங்கள் போல் காட்சி அளித்தன. இதே போன்று அடுத்த நிகழ்வு 2418ஆம் ஆண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பொதுமக்களால் பார்த்து ரசிக்க முடியாமல் போனது.



(அமெரிக்க நகரமான உட்டாவில் ஒரு நண்பர் தொலைநோக்கி கேமராவைப் பயன்படுத்தி நேற்று 22.12.2020 எடுத்த புகைப்படத்திற்கு மேலே. மேலே சனி அதன் மோதிரங்கள் மற்றும் கீழே வியாழன் அதன் நான்கு நிலவுகளுடன் உள்ளது. அற்புதமான பிரபஞ்சம்.)


சென்னை, சேலம், மதுரை உள்பட பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வைக் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் 2 கோள்களையும் பார்த்து ரசித்தனர்.

சென்னையில் பிர்லா கோளரங்கம், டெல்லியில் நேரு கோளரங்கம், ஜந்தர் மந்தரில் உள்ள வானியல் கோளரங்கம், பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு கோளரங்கம் ஆகியவற்றில் இந்த அரிய நிகழ்வை சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழனும் சனியும் சந்தித்து கொண்டதால் பூமிக்கு எதுவும் பாதிப்பு வருமோ என்று பயப்பட தேவையில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும் இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை.

அடுத்து இந்த 2 கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு, 2040ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியும், அதற்கு பிறகு 2060ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியும் சந்தித்துக்கொள்ளும் என்று வானியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 2080ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதிதான் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.