தமிழகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம்

 



ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று மருத்துவர்கள் சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக மருத்துவ சங்கத்தின் தலைவர் சி.என்.ராஜா, செயலர் ஏ.கே.ரவிக்குமார் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

இதுவரை அலோபதி மருத்துவர்கள் (ஆங்கில மருத்துவர்கள்) செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

மேலும் நிதி ஆயோக்,எல்லா மருத்துவத் துறைகளையும் இணைத்து ஒரே மருத்துவ முறையை (நவீன மருத்துவம், ஆயுஷ்) 2030-ம் ஆண்டில் கொண்டுவர உள்ளது. இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த அறிவிப்பின் மூலம் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கான எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். 

ஆயுர்வேத அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தரமான, ஆபத்துகள் இல்லாத ஒரு சிகிச்சையை தர இயலாது.

நாட்டின் பொது சுகாதாரத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் கேள்விக் குறியாக்கி, நோயாளிகளுக்கு அதிக பிரச்சினைகளை தரக்கூடிய இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.