கர்ப்பிணி பெண்ணின் கருப்பையில் இறந்த குழந்தையை அகற்றுவதில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரத் (29), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கனிமொழி (27). நிறைமாத கர்ப்பிணியான இவர், தேனாம்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, இந்த மாதம் முதல் வாரத்தில் பிரசவ தேதி குறித்து தரப்பட்டது. மருத்துவர்கள் கொடுத்த தேதி முடிந்தும், அவருக்கு பிரசவ வலி ஏற்படாததால், கடந்த 15ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, பிரசவ வலி ஏற்படுவதற்கு கனிமொழிக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி கனிமொழியை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டதாகவும், உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
இறந்த குழந்தையை வெளியில் எடுக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இசபெல்லா மருத்துவர்கள், குழந்தையை சுகப்பிரசவத்தில் எடுக்க முடியும் என்று கூறி நாட்களை கடத்தி வந்துள்ளனர்.
ஆனால் இறந்த குழந்தை காரணமாக தொற்று ஏற்பட்டு கனிமொழி இன்று காலை உயிரிழந்துவிட, இதைக் கேட்டு ஆத்திரமடைந்த உறவினர்கள் கனிமொழியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தபடும் என்றும் போலீசார் சார்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.