கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் - கோவை மக்கள் புகழஞ்சலி

 

கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவு



வலது கை கொடுப்பது இடது கைக்குதெரியக்கூடாது என்பது போல மக்களுக்கு பல நன்மைகளை செய்து எந்த விளம்பரமும் இன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறார் கலியுக கர்ணன் சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம்(78). 

இவரது மறைவுக்கு கோவை மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வரும் அதே நேரத்தில் அவரது கொடைத்தன்மை பற்றியும் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் சத்தமில்லாமல் செய்த சாதனை, கொடைத்தன்மை பற்றி கோவைவாசிகள் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். 

பல கோடி ரூபாயை மக்களுக்கு செலவு செய்து விட்டு சத்தமில்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார் சுப்ரமணியம். அவரது கொடைத்தன்மையை பார்க்கலாம்.

கோவை சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் மதிய சாப்பாடு சாப்பிட சென்றால் அங்கு பிரமாண்டமான சுத்தமான வளாகம். ராணுவக் கட்டுப்பாடு. பார்த்தவுடன் பிரமிப்பை ஏற்படுத்தியது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கான டோக்கன் வாங்க வேண்டும். ஒரு நபருக்கு ரூபாய் 20 மட்டுமே. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். பார்சல் கிடையாது.

ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கென தனி உணவு விடுதியுள்ளது. அங்கு அவர்களுக்கு இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது. 

உணவில் மட்டுமல்லாமல், கல்வி, பெட்ரோல், டீசல், பார்மஸி, டயாலிஸிஸ் சேவை, ரத்த வங்கி சேவை, கண் கண்ணாடி கடை, ரேடியோலஜி சேவை, ஆய்வு மையம், எரிவாயு எரியூட்டு மையம் என்று பல சேவைகளை செய்து வருகிறார்கள். 

இந்த வளாகத்திலுள்ள மருத்துவ ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவை மற்ற மையங்களைவிட, 50 முதல் 70 % கட்டணம் குறைவு. இந்த அனைத்துப் புகழுக்கும் காரணம் இதன் நிறுவனர் சுப்பிரமணியம். ஆனால், வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக் கூடாது என்று சொல்வதைப் போல, இதுவரை தன்னை எங்கேயும் இவர் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை.

ஒரு அரசு தன் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை சத்தமே இல்லாமல் சுத்தமாக செய்து வந்த சுப்பிரமணியன் அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை. 

முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் வாழ்த்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறது சுப்பிரமணியத்தின் குடும்பம். நல்ல மனம் வாழ்க. இவர்களைப் பற்றி இன்னமும் அறிந்து கொள்ள http://shanthisocialservices.org. கலியுக கர்ணன் ஆக வாழ்ந்து மறைந்த அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

சமூக நலப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான சமூக சேவகர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் மறைவு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.