வாரத்தில் 5 நாட்கள் மட்டும் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் முதற்கட்டமாக 33% ஊழியர்களுடன் இயங்கி வந்தது. தொடர்ந்து, மே மாதம் 18ம் தேதி முதல் அரசு அலுவலகப் பணிகளை நெறிமுறைப் படுத்தும் வகையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 50% அரசு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது.
அதே சமயம், சனிக்கிழமையையும் உள்ளடக்கி, இனி வாரத்தில் ஆறு நாள்களும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது மாற்றப்பட்டு, அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே இயங்கும் என்று புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.