கார்த்திகை தீபம்.. பாவங்களை போக்கும்
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா.
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்வாக பார்க்கப்படுவது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தான்.
மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய ஸ்தலம் தான் திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷம்.
இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வீடுகள்தோறும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள்.
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும்.
திருக்கார்த்திகை நாளைத் தான் நாம் கார்த்திகை தீபமாகக் காலங்காலமாகக் கொண்டாடுகிறோம். இந்த திருக்கார்த்திகை என்பது கார்த்திகை மாதத்தில் வருகின்ற பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேருகின்ற நாள் தான் திருக்கார்த்திகை.
அந்த நாளில் காலங்காலமாக மக்கள் தங்களுடைய வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்குரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள்.
அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானை குறித்து கொண்டாடும் விழாவாகும். இதை அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.
பரணி தீபம் என்றால் என்ன?
அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் 'பரணி தீபம்" என்று பெயர் பெற்றது.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது.
அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
பாவங்களைப் போக்கும் பரணி தீபம் :
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
"கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எத்தனை விளக்குகள், எங்கு ஏற்ற வேண்டும்...*
ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும்.
அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள்.
அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கு,
சமையல் கூடத்தில் 1 விளக்கு,
நடையில் 2 விளக்கு,
வீட்டின் பின்புறம் 4 விளக்கு,
திண்ணையில் 4 விளக்கு,
மாட குழியில் 2 விளக்கு,
நிலைப்படிக்கு 2 விளக்கு,
சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு,
வெளியே யம தீபம் ஒன்று,
திருக்கோலம் இட்ட இடத்தில் 5
என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.
27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிக்கும். எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடுங்கள்.
மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வர்யம் பெருகும்.
தீப பலன்கள் :
நமது வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
அடிமுடி காண முடியாதவன் சிவபெருமான் என்பதை விஷ்ணுவும், பிரம்மாவும் உணர்வதை முன்னிட்டு, அடிமுடியற்ற ஜோதி சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம் திருவண்ணாமலை. அதை கொண்டாடும் வகையிலேயே மகா கார்த்திகை தீப திருநாளன்று திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று வீட்டின் எந்த இடத்தில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் :
கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக்கூடிய மாதம். கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் அவசியம்.
விளக்கேற்றும் நேரம் :
கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.
பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர்.
இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
சிவன் சக்தியின் அருள் :
அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம்.
தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.
கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும்.
அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும் பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
திருச்சிற்றம்பலம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்