தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி அளித்திடுக: தமிழக அரசுக்கு கி.வீரமணி கோரிக்கை

 



மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து தனியார் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்குத் தமிழக அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக, கி.வீரமணி  (நவ. 20) வெளியிட்ட அறிக்கை:


"அரசுப் பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் அளித்திருப்பது, நல்ல பலன்களை அடைந்துள்ளது. இவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இருபால் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.


அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத இந்த இருபால் மாணவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டணத்திற்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிக்கப்பட்ட கட்டணங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடாகும்.


கைக்குக் கிட்டியும் வாய்க்குக் கிட்டவில்லை!


தையல் தொழிலாளியின் மகன், பெயிண்டருடைய மகள், வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகள் போன்றோர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாயைச் செலுத்தும் நிலையில் இல்லாத ஒரு சூழலில், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்புக் கிட்டியும் இவ்வளவு பெருந்தொகையைச் செலுத்தும் நிலையில் இல்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பரிதாப நிலைப்பாடுதான் இது!


இந்த சோகத்திலிருந்து இந்த ஏழைப் பாழைகளை மீட்கும் கடப்பாடு அரசுக்கு முக்கியமாக, கண்டிப்பாக இருக்கவே செய்கிறது.


உயர்சாதியில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு உதவி செய்யும் நிலையில், இந்த அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களுக்கு இருகரம் நீட்டி உதவிட தமிழக அரசு முன்வரவேண்டும், அதுதான் உண்மையான சமூக நீதி!


தமிழ்நாடு அரசு இதனை முக்கியமாகக் கருதி, இடம் கிடைத்தும் பொருளாதாரத் தடையால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலைக்கு ஆளாக்கப்பட்ட இருபால் மாணவர்களையும் கை கொடுத்துத் தூக்கவேண்டும்! சமூக நீதியில் இது மிகவும் முக்கியமான அம்சமே!".


இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.