தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், 'நிவர்' புயல் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
'நிவர் ' புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு நேரில் சென்ற முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட பழனிசாமியிடம், விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். மேலும் சில இடங்களை பார்வையிட்ட பின்னர், துறைமுகத்திற்கு வந்து சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 13 லட்சம் மக்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, 2299 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியுள்ளனர். கடலூரில் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த 52, 226 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் 77 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை சரி செய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. 1,617 ஹெக்டேர் நெற்பயிர்கள், 315 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 35 ஏக்கர் வாழை சேதமடைந்துள்ளது. 8 ஹெக்டேரில் மரவள்ளிக்கிழங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது தற்போது வரை கிடைத்த தகவல். மாவட்ட நிர்வாகம் முழுமையாக கணக்கெடுத்த பின்னரே பாதிப்பு விவரம் தெரியவரும்.
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுதொகை வழங்கப்படும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். நிவர் புயலில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் எப்படி எதிர்கொள்வது எப்படி பாதுகாப்பது எடுத்த நடவடிக்கை சரியான முறையில் நடவடிக்கை எடுத்தோம். இதனால் உயிர்சேதம், பொருட்சேதம் குறைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் அனைத்து இடத்திற்கு சென்ற பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொண்டனர்.வருவாய் துறை அமைச்சர், சென்னையில் கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் தங்கியிருந்து, மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்ததார். இவ்வாறு அவர் கூறினார்.