திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் குறித்து, டிஜிபி அலுவலகத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் இன்று புகார் மனு அளித்தனர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று முன்தினம் (நவ. 20) திருக்குவளையில் தொடங்கினார். அவரது பயணம் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒவ்வொரு நாளும் பிரச்சார பயணம் தொடங்கியதும் கைது செய்யப்பட்டு வருகிறார்.
இது குறித்து, திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, (நவ. 21) தமிழக காவல்துறை டிஜிபி-க்கு புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், (நவ. 22) டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினரும் திமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று இதுதொடர்பாக புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து, டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"திமுக இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின் கடந்த 2-3 தினங்களாக இளைஞரணிக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் தன் பணிகளை மேற்கொள்ளும்போது காவல் துறையினர் திடீர் திடீரெனெ வந்து அவர்களை கைது செய்கின்றனர். பல மணிநேரம் காக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் காக்க வைக்கப்பட்டு இரவு 10-11 மணிக்கு விடுதலை செய்யப்படுகிறார்.
அதேநேரத்தில், வேல் யாத்திரை நடத்தும் பாஜகவினரை கோவிட் விதி முறைகளை மீறி செயல்படுவதாக கைது செய்கின்றனர். அவர்களை மாலை 4-5 மணிக்கு வெளியில் விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை பல மணிநேரம் காக்க வைக்கின்றனர்.
எங்கள் இயக்கத்தில் கைது, சிறை, சித்ரவதை ஆகியவை நாங்கள் பார்த்த ஒன்றுதான்.
இந்த கொடுமை நடப்பதை தட்டிக் கேட்க வேண்டும். ஒரு அராஜக ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது டிஜிபியின் கடமை. அந்த கடமையிலிருந்து அவர் தவறியிருக்கிறார் என நேரடியாக சொன்னோம்.
பாஜகவுக்கு ஒரு நீதி. திமுகவுக்கு ஒரு நீதியா? அமித் ஷா வந்தார். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டதா? கூட்டம் கூட்டமாக வந்தார்கள். இதையெல்லாம் அரசியல் ரீதியாக பார்க்க சரியாக இருக்கும்.
ஆனால், கரோனா விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் நடந்தார்களா?".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.