கோவிந்தராஜ பெருமாள் சயன கோல தத்துவம்-கும்பகோணம் - உத்தான சயனம்

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் 274 தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.


மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம்.


மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.


வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது.


அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.


" alt="" aria-hidden="true" />


ஸ்ரீரங்கம் - வீர சயனம்
மகாபலிபுரம் - தல சயனம்
திருமயம் - போக சயனம்
திருக்கோஷ்டியூர் - பால சயனம்
கும்பகோணம் - உத்தான சயனம்
திருவனந்தபுரம் - அனந்த சயனம்
திருமோகூர் - பிரார்த்தனா சயனம்
திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்
திருச்சித்திரக்கூடம் - போக சயனம்
திருநீர்மலை - மாணிக்க சயனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்


வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.


இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.


கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும்.


இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு.


இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின்108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும்.


சோழர்களா கட்டப்பட்ட இக்கோவில் கலைநயம் மிகுந்த சிற்பங்கள் தூண்கள் மண்டபங்கள் இராஜ கோபுரங்கள் கட்டப்பட்டவையாகும்.


இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார்.


சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். தாயார் கோமளவல்லி. 


இந்து புராணத்தின் படி, பொற்றாமரை குளத்தின் கரையில் தவம் செய்த ஹேமரிஷி என்ற முனிவருக்காக இந்து கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வைணவ தெய்வம் சாரங்கபணி தோன்றினார். 


ஒருமுறை, பிரிகு முனிவர் விஷ்ணுவை அவரது இருப்பிடமான பாற்கடலில், சந்திக்க விரும்பினார். முனிவரால் விஷ்ணுவின் கவனத்தை ஈர்க்க இயலவில்லை.


அதனால் ஏற்பட்ட கோபத்தில், முனிவர், விஷ்ணுவை மார்பில் உதைத்தார். ஆனால், விஷ்ணு, கோபத்தை காட்டாமல் அமைதியாக இருந்தார். இதனால், விஷ்ணுவின் மார்பில் வசிக்கும் மகாலட்சுமி கோபமடைந்தார்.


அவர் வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்து பத்மாவதி வடிவத்தை எடுத்தார். விஷ்ணு அவரைப் பின்தொடர்ந்து அவளை மணந்தார். பத்மாவதிக்கு பழைய நினைவுகள் திரும்பின.


அதனால், மீண்டும் விஷ்ணுவிடம் கோபம் ஏற்பட்டது. மகாலட்சுமியின் கோபத்தைத் தவிர்க்க, விஷ்ணு கோயிலின் நிலத்தடி அறையில் பாதாள சீனிவாசராக வசித்து வந்தார்.


இதற்கிடையில், பிரிகு முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்பு கோரினார். மற்றும் மகாலட்சுமியை தனது அடுத்த பிறவியில், தனது மகள் கோமலவள்ளியாக பிறக்கும்படி கேட்டுக்கொண்டார்.


அடுத்த பிறவியில், முனிவர் ஹேமரிஷியாகப் பிறந்தார். மகாலட்சுமியை தனது மகளாக அடைய தவம் செய்தார்.


விஷ்ணு முனிவரின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்தார், மேலும், அவரின் விருப்பத்திற்கிணங்க, மகாலட்சுமியை மகளாகப் பெற வரமளித்தார். இதனால், மகாலட்சுமி ஆயிரம் தாமரைகள் பூத்திருந்த பொற்றாமரைக் குளத்திலிருந்து வெளிவந்தார்.


இதனால் கோமலவள்ளி (தாமரையிலிருந்து தோன்றியவர்) என்று பெயரிடப்பட்டார். விஷ்ணு தனது தங்குமிடமான வைகுண்டத்திலிருந்து குதிரைகள் மற்றும் யானைகள் பூட்டப்பட்ட தேரில் ஆரவாமுதனாக பூமிக்கு இறங்கினார். 


மகாலட்சுமியை சமாதானப்படுத்தி, அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, விஷ்ணு, அருகிலுள்ள சோமேஸ்வரர் கோவிலில் தங்கியிருந்தார்.


இறுதியில், மகாலட்சுமியின் கோபம் தணிந்ததால், இவர்களின் திருமணம் இனிதே நடந்தது.  சாரங்கபாணி ("கையில் வில் வைத்திருப்பவர்") என்ற பெயர் சமசுகிருத வார்த்தையான சாரங்கத்தில் இருந்து உருவானது, சார்ங்கம் என்றால் விஷ்ணுவின் வில் என்றும், பாணி என்றால் கை என்றும் பொருள் ஆகிறது.


கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு, சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.


முனிவர் ஹேமரிஷி, லட்சுமி மற்றும் திருவிழா படங்கள் கருவறைக்குள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சினாயண வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன.


ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற் பாதியில் திறக்கப்படுகிறது. 


பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர்.


கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது.


கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.


சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம் நமசிவாய 


ஓம் நமோ நாராயணாய


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்