ஹஜ் பயணம் செய்யும் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் பயணிகள் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து செல்வதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டதற்கு ஜம்மியத் உலமா ஹிந்த் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
“நடப்பு ஆண்டில் கரோனோ காரணமாக புனித ஹஜ் பயணம் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணத்திற்கான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் பல்வேறு தகவல்களோடு, புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி அக்டோபர் 10 எனவும், ஹஜ் விமானங்கள் சென்னையிலிருந்து புறப்படுவதற்குப் பதிலாக கேரள மாநிலம் கொச்சியில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கொச்சி வெகுதூரத்தில் உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமானிலிருந்து கொச்சி செல்ல முறையான போக்குவரத்து வசதிகள் கிடையாது.
இந்த மூன்று மாநிலத்தவரும் சென்னையிலிருந்தே புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், கேரளா ஆகிய நான்கு மாநிலப் பயணிகளையும் கொச்சி விமான நிலையத்தில் கூடவைப்பது கரோனா தொற்றை ஏற்படுத்தும் அபாயமுண்டு.
நிலைமை இப்படியிருக்க மத்திய ஹஜ் கமிட்டியுடைய இந்த அரைகுறை ஏற்பாட்டை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு கொச்சினிலிருந்து ஹஜ் விமானம் புறப்படும் என்ற இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் இந்த ஏற்பாட்டிற்கும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.
தமிழக ஹஜ் குழுமம் விழித்திருக்க வேண்டுகிறேன். புனித ஹஜ் விமானங்கள் வழக்கப்படி சென்னையிலிருந்து புறப்பட,தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.