வருகின்ற சட்டமன்ற தேர்தலில்,அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவரும் தெரிவித்த நிலையில் ,அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 40 சட்டமன்ற தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் கூட்டணி :
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.ஆனால் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
அதிமுக தேர்தலுக்கு தயார் :
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றது.அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி உள்ளது.ஆகவே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமித் ஷா வருகையும், எதிர்பார்ப்பும் : பாஜக-கூட்டணி உறுதி :
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தான் அதிமுக – பாஜக கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தனர்.
மேலும் அமித் ஷாவும் தனது பங்கிற்கு பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு பாறை போல நாங்க உறுதியாக இருப்போம் என்று பேசினார்.இதனால் அதிமுக -பாஜக கூட்டணி உறுதியானது.
பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் :
முதல்வரும், துணை முதல்வரும் உள்துறை அமைச்சர் நேரில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் தேர்தல் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாஜக தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதிமுக தரப்பில் 25 தொகுதிகள் வரை கொடுப்பதாக உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அதிமுக தலைமை ,கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.