சப்த விடங்க தலங்கள் திருவாய்மூரில் “நீலவிடங்கர்

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.


வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்


 



காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் சோழநாட்டில் சிறப்பான பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. பாடல்பெற்ற தென்கரைத் தலங்களில் 124வது தலமாக விளங்குவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாய்மூர் திருத்தலம் ஆகும்.


சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. அப்பருக்கு இறைவன் "வாய்மூரில் இருப்போம் வா" என்று உணர்த்திய திருத்தலம்.இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம்.


சப்தவிடங்கத்தலம்:

சிவபெருமான் விடங்கர் வடிவமாக (தியாகராஜராக) ஏழு திருக்கோயில்களில் சிறப்பாக வழிபடப்பெறுகின்றார். இவற்றை 'சப்தவிடங்கத்தலங்கள்' எனக்கூறுவர். இத்தலங்களில் இறைவன் ஆடிய நடனங்களும் சிறப்பானவை


திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமலநடனம்


இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன


இத்தலத்திலுள்ள இறைவன் வாய்மூர்நாதர், இறைவி பாலினும் நன்மொழியாள்


ஆலயத்தின் பெருமைகள்


கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ள பாபமேக பிரசண்ட தீர்த்தம் சகல பாவத்தையும் போக்கவல்லது. 


பிரம்மா முதலான தேவர்கள், தாரகாசுரனுக்குப் பயந்து பறவை உருவெடுத்து சஞ்சரிக்கும்போது, இத்தலம் வந்து இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்ற பெருமை உடையது.


இத்தலத்தில் உள்ள நடுமண்டபத்தில், நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரஹ தோஷங்கள் விலகும்.


மேலும், இத்தலத்தில் இறைவனை வான்மீகி சித்தர் வழிபட்ட சிறப்பும் கூறப்படுகிறது. மூலவர் திருவாய்மூர் சன்னிதியின் தென்புறம் தியாகராஜர் சன்னிதியும், வடபுறம் திருமறைக்காடர் சன்னிதியும், அம்பாள் சன்னிதியும் அமைந்துள்ளன.


இத்தலத்தில் காசிக்கு இணையான அஷ்ட பைரவர்கள் அமைந்துள்ளனர். ஆனந்த பைரவர், அகோர பைரவர், உத்தண்ட பைரவர், பால பைரவர், பாதாள பைரவர், ஈஸ்வர பைரவர், கால பைரவர் மற்றும் சுவர்ண பைரவர் ஆகிய 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர்.


ஆனால், இப்போது அகோர பைரவர், ஆனந்த பைரவர், இத்தண்ட பைரவர், பால பைரவர் ஆகிய 4 மூர்த்தங்கள்தான் இருக்கின்றன. மற்ற நான்கு மூர்த்தங்களுக்கு பதிலாக 4 தண்டங்கள் ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டுள்ளன. 


பைரவரின் அருளால் சாபம் தீங்கப்பெற்ற இந்திரன் மகன் ஜயந்தன், இத்தல இறைவனிடம் யார் உன்னை சித்திரை மாத முதல் வெள்ளிக்கழமையில் வழிபடுகிறார்களோ, அவர்களது வேண்டுதலை நிறைவேற்றி நல்லருளும், புத்திரப்பேறும் தந்தருள வேண்டும் என்று வேண்டினான்.


இறைவனும் அவ்வாறே ஜயந்தனுக்கு அருள்புரிந்தார். அதன்படி, ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று பைரவருக்கு ஜயந்தன் பூஜை நடைபெற்று வருகிறது.


திருவாய்மூர் கோயில் கல்வெட்டுக்கள்

இக்கோயிலில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178-1218) மற்றும் மூன்றாம் இராஜராஜசோழன் (1216-1256) காலத்தைச் சார்ந்தவையாகும். 

கோட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த 'செம்பொற்ஜோதி வட்டணை ஆடல் உடையான்' என்பார் இக்கோயிலில் பலிபீடத்தில் நடனமாடும் கோலத்தில் (வட்டணை அமைதியில் எனக் கல்வெட்டு குறிப்பிடுவது சிறப்பானது)


இறைத்திருமேனியை எழுந்தருளுவித்து அதன் வழிபாட்டிற்காகத் தானம் அளித்த செய்தி மூன்று கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மற்றும் கோயிலையும் இக்கல்வெட்டு 'வட்டணை ஆடலுடையார் கோயில் திருவாய்மூருடையார்' என்றே பெயரிட்டு அழைக்கிறது.


அதாவது இவ்வூர் இறைவன் பெயரையே கொடையளித்தவர் பெயராகக் கொண்டுள்ளார் என்பது சிறப்புக்குரிய செய்தி.


திருநாவுக்கரசர் பெருமானும், திருஞானசம்பந்தப் பெருமானும் திருவாய்மூர் இறைவனையும் இறைவியையும் போற்றிப்பாடி அருள் பெற்ற சிறப்புடன் இத்தலம் விளங்குகிறது.


திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) திருநாவுக்கரசர் பதினொரு திருப்பாடல்கள் கொண்டு திருப்பதிகம் அருளிச்செய்யத் திருக்கதவு திறந்தது.


அடுத்து திருஞானசம்பந்தர் முதல் திருப்பாட்டு அருளிச் செய்த உடனே திருக்கதவு மூடிக்கொண்டது.


இதனால் வருந்தியவராய் திருநாவுக்கரசு சுவாமிகள் நித்திரை கொள்ளும் போது இறைவன் அவரிடம், திருவாய்மூரில் இருப்போம்! தொடர்ந்து வா என அருளினார்.


திருவாய்மூரில் இறைவனைக் கண்டு "திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன் நான் என்றலும் தோன்றுமே" என இறைவன் கருணையைப் போற்றினார்.


"கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக்
கண்ணியர் வீணையர் தாமும் அஃதே
எட்டுணை சாந்தமொடு உமை துணையா
இறைவனார் உறைவதோர் இடம் வினவில்
பட்டிணை யகல் அல்குல் விரிகுழலார்
பாவையர் பலியெதிர் கொணர்ந்து பெய்ய
வட்டணை ஆடலொடு இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே. (2-ம் திருமுறை)


பின்னர் திருஞானசம்பந்தரும் அங்கே வர, இருவரும் காண இறைவன் நடனமாடுகிறார். இதனைக் கண்ட நாவுக்கரசர் மகிழ்ந்து போற்றுகின்றார் (6-ம் திருமுறை).


ஈசன் அம்பிகையுடன் இருந்து ஆடிய நடனக்காட்சியை ஞானசம்பந்தர் பெருமானும் தமது பாடலில் போற்றுவதைக் காணலாம்.


இத்தலம் வழிபாட்டுச் சிறப்புடனும் வரலாற்றுச் சிறப்புடனும் விளங்குகிறது


திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில், திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும், திருநெல்லிக்கா என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.


நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி சாலையில் சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் இறங்கி, எட்டிக்குடி செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.


திருக்கோளிலிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்து மூலமாகவும் செல்லலாம்.


நாளை திருமறைக்காடு - புவனிவிடங்கர் - அம்சபாத நடனம் தொடரும்.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



 



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்