நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ்
கலைஞர்களுக்கு இறப்பு என்பது உடலால் மட்டும் தான். அவர்கள் ஒவ்வொரு ரசிகனின் உள்ளத்திலும் நீங்காமல் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.
இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என அழைக்கப்பட்ட நாகேஷ் தமிழ் சினிமாவின் காமெடி கிங்காக இன்றும் நீடித்து இருக்கிறார்.
நாகேஷ் (செப்டம்பர் 27, 1933 - சனவரி 31, 2009) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
பெயரிலே நகைச்சுவை
1933ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தாராபுரத்தில் பிறந்தவர் நாகேஷ். நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது தந்தை கிருஷ்ணாராவ் மற்றும் தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்
அந்த ஒல்லியான உடம்புக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா? குண்டு ராவ்.
பெயரிலே எப்படி நகைச்சுவை தன்மை ஒட்டிக் கொண்டு இருக்கிறது பார்த்தீர்களா?
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.
மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
மேடை நாடகங்களில் நாகேஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்த அவரை திரைத்துறைக்கு எம்.ஜி.ஆர் தான் அழைத்து வந்தார்.
நாகேஸ்வரன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், பின்னாளில் நாகேஷ் ஆக மாறினார்.
ஆயிரம் படங்கள்
1958ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை நடிகர் நாகேஷ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இந்திய ரயில்வேயில் கிளர்க் ஆக வேலை செய்து வந்த நாகேஷ், தனக்கான சினிமா ரயிலை எம்.ஜி.ஆர் கரம் பிடித்து ஏறி ஏகப்பட்ட சாதனைகளை படைத்தார். மனமுள்ள் மறுதாரம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ்
கிங் ஆப் காமெடி என்ற பெயர் பெற்ற ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் ஜெர்ரி லூயிஸுக்கு நிகராக இந்தியாவில் காமெடியில் கலக்கிய ஒரே நடிகர் நாகேஷ் என்பதால், இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என அழைக்கப்பட்டார் நாகேஷ். நகைச்சுவை மட்டுமின்றி நடனத்திலும் நாகேஷுக்கு நிகர் நாகேஷ் தான்.
எம்.ஜி.ஆர், சிவாஜி உடன் நாகேஷ்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், சிவக்குமார் என ஏகப்பட்ட நடிகர்கள் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தியவர்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.
சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆருடன் இவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் சூப்பர் ஹிட் தான். புதிய பூமி, படகோட்டி, நாடோடி, அரசகட்டளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, நல்ல நேரம் என நூற்றுக்கணக்கான படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
காமெடி ஜோடி
நாகேஷுக்கு திரைப்படங்களில் பக்காவான காமெடி ஜோடியாக ஆச்சி மனோரமா இருந்தார். இருவரும் இணைந்து செய்த நகைச்சுவை அட்டகாசங்கள் தன் தமிழ் சினிமா ரசிகர்களை நோயில்லா வாழ்வில் பல ஆண்டுகள் வாழ வைத்தது என்றே சொல்லலாம். நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்து அசத்திய பெருமை இருவருக்குமே உண்டு.
ஹீரோ நாகேஷ்
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.
காமெடி நடிகராக நடித்து வந்த நாகேஷ், 1964ம் ஆண்டு இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான சர்வர் சுந்தரம் படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தார்.
தொடர்ந்து, நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், சாது மிரண்டால், அனுபவி ராஜா அனுபவி, எதிர்நீச்சல், சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
கமலுடன் நாகேஷ்
எம்.ஜி.ஆருக்கு பிறகு கமலுடன் நடிகர் நாகேஷுக்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டது. மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும்.அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் கமலுடன் இணைந்து காமெடியில் கலக்கி எடுத்து இருப்பார்.
கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார்.
நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.
கருப்பு நாகேஷ்
இன்றைய மீம் தலைமுறைகளின் காமெடி கிங்காக இருக்கும் வைகைப் புயல் வடிவேலுவுக்கே கருப்பு நாகேஷ் என்ற பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நாகேஷின் உடல் மொழிகள், நடனத் திறமை உள்ளிட்ட பலவற்றை உள் வாங்கி நடித்து கலக்கியவர் தான் வடிவேலு என்றால் அது மிகையாகாது.
2009ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தனது 75வது வயதில் இயற்கை எய்தினார்
அப்படிப்பட்ட உன்னத கலைஞனை நினைத்து போற்றுவோம்
தொகுப்பு மோகனா செல்வராஜ்