திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திருவெண்காடு வடமொழியில் "சுவேதாரண்ய க்ஷேத்திரம்" என்றழைக்கப்படுகின்றது.
தல வரலாறு:
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான்.
அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார்.
அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.
சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.
தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.
இவர் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.
சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். 108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம்
சிறப்புகள்
- புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம்.
- சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
- படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.
- சம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததால், அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தாங்கிவந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பது செவிவழிச் செய்தி. அதே கோலத்தில் "பிள்ளை இடுக்கி அம்மன்" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் நமக்குத் தரிசனம் தருகிறாள் அன்னை.
- அருகிலுள்ள கிராமங்களில் தொற்று நோய் பரவும் போது , யாராவது ஒருவர் மேல் அகோரமூர்த்தி ஆவேசமாக வந்து, விபூதி கொடுத்தவுடன் அந்நோய் மறைந்துவிடும்.
பிரதி ஞாயிறுகளிலும்- குறிப்பாக கார்த்திகை ஞாயிறுகளில் அகோர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாசி மாத பிரமோத்ஸசவத்தில் , பூர நக்ஷத்திரத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெறுகிறது.
புராண பெயர்(கள்): ஆதிசிதம்பரம், திருவெண்காடு, சுவேதாரண்ய க்ஷேத்திரம் பெயர்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில்
ஊர்: திருவெண்காடு
மாவட்டம்: மயிலாடுதுறை
மூலவர்: சுவேதாரண்யேஸ்வரர்
இறைவி : பிரமவித்யாம்பிகை
தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்
தீர்த்தம்: முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்
பாடல் வகை: தேவாரம், திருவாசகம்
பாடியவர்கள்: சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்: சோழர்கள்
அமைவிடம் : தமிழ் நாடு மயிலாடுதுறை - மங்கைமடம் செல்லும் நகரப் பேருந்துகள் திருவெண்டுகாடு வழியாகச் செல்கின்றன.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....
திருச்சிற்றம்பலம்
பக்தியுடன் மோகனா செல்வராஜ்