இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப்போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார்.
இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
சடையநாயனாருடைய மனைவியார் இசைஞானியாரென்பவர் எம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்திநாயனாரைப் பெற்றருளிய அவருடைய பெரும்புகழைச் சிறியேனுடைய புன்மொழியினாலே புகலமுடியுமோ? முடியாது.
தொன்மம்
திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
இசைஞானியார் - சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.
"கமலாபுரத்தில் (திருவாரூர்) சிவ கௌதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் மரபில் அவதரித்தவர்" எனக் கூறுஞ் சிலாசாசனத்தாலும் ஆரூர்ப் புனித அரன் திருத்தாள் தன் உள்ளத்து நயந்தாள் என்னுந் திருத்தொண்டர் திருவந்தாதி உண்மையாலும் திருவாரூர்ப் பிறந்து திருவாரூர்ச் சிவபெருமானிடத்து வெகு ஈடுபாடு கொண்டிருந்தவராக அறியப்படும் இசைஞானியார் சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை என்பதிலிருந்து, "ஆரூர்த் திருமூலத்தானத்தே அடிப்பேரன் ஆரூரன்" என அவரே பாடியதற்கிணங்கவுள்ள, அவர் இயற்பெயராகிய நம்பியாரூரர்ப் பெயர் வழக்குக்கும் திருத்தொண்டர்புராணங் கூறுதற்கிணங்க, அவரின் அதிசயான்விதமான வாழ்விய லற்புதச் சிறப்புகளுக்குத் திருவாரூரே கேந்திர நிலையமா யிருந்துள்ளமைக்கும் ஒருகால், கொடுங்கோளூரில் சேரமானோடு நண்புறவு கலந்து களித்திருக்கையில் அவர் அன்பநுசரணைத் தடையையும் மீறி, "ஆரூரானை மறக்கலுமாமே" என அவரை ஆவலித் தெழுவிக்கு மளவினதும் மற்றொரு கால் திருவொற்றியூரில் திருவாரூர்த் தொடர்புக்குப் பாதகமாம்படி, சிவன் சந்நிதியில் தாம் செய்து வைத்த சபதத்தையும் மீறி, "எத்தனை நாட் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே" என அவரை உத்வேகங்கொளவைக்கு மளவினது மான அவரது திருவாரூர்த் தலப்பற்று முதிர்வுக்கும் நேரடிக் காரணம் இவர் அந்த அம்மையாரின் கர்ப்பவாசம் பெற்றுப் பிறந்தமையே எனல் நன்கு துணியப்படு மாகலின் அத்தகைய அவர் பெருமகிமை புகழ்ச்சி வரம்புள் அடங்க வாரா தென்பதே அதற்காஞ் சரியான மதிப்பீடாதல் அமையும். அது அவர் புராணத்தில், ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்களெய் தழித்தா ராண்ட நம்பிதனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டியாரை என்சிறுபுன் மொழியாற் புகழ முடியுமோ முடியா தெவர்க்கும் முடியாதால் என வரும்.
இசைஞானியார் குருபூசை நாள்: சித்திரைச் சதயம்
திருச்சிற்றம்பலம்.
நாளை - பக்தியுடன் மோகனா செல்வராஜ்